×
 
☰

சென்னையில் தொடரும் கனமழை! தேவையில்லாம வெளிய வராதீங்க!! மாநகராட்சி ஆணையர் சமீரன் அட்வைஸ்!

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில் 220 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் சராசரியாக 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வளசரவாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, அடையாறு, கோடம்பாக்கம் மற்றும் ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் தொடர் மழை! களமிறங்கிய மேயர் பிரியா! பெரம்பூர், புளியந்தோப்பில் நேரடி ஆய்வு!

மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக 137 மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மூன்றில் மழைநீர் தேங்கியிருந்ததாகவும், தற்போது அங்கு போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் ஆணையர் கூறினார். கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுவரை மழைநீர் தேக்கம், மரங்கள் சாய்தல், தெருவிளக்குகள் எரியாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக 1,212 புகார்கள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை (TN SDRF) உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். தண்ணீர் அதிகமாகத் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சென்னையில் வெள்ளத் தடுப்புக்கு மழைநீர் வடிகால் மட்டுமின்றி, ஏரிகள், ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களின் ஒருங்கிணைந்த மேலாண்மையும் அவசியம் என அவர் தெரிவித்தார். வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகளில் உள்ள பழைய வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவது தொடர்ந்து சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மாநகராட்சி, பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளத் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால்தான் மழை பாதிப்புகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

இதையும் படிங்க: கனமழை நேரத்தில் சொந்த ஊருக்குச் சென்ற நீர்வளத்துறை அதிகாரிகள்! ரூ.40 கோடி பணிகள் குறித்து சர்ச்சை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share