×
 

பரந்தூருக்கு பதில் 2 இடங்கள் தேர்வு! விஜய் அரசு எடுத்த முக்கிய முடிவு! சென்னையின் 2-வது ஏர்போர்ட் எங்கே அமையும்?

அடுத்ததாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்து, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி இடம் முடிவு செய்யப்படும்.

சென்னை: சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான புதிய முயற்சியில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையின் 2-வது விமான நிலைய திட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சுமார் 3 தசாப்தங்களாக இத்திட்டத்துக்கான இடம் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 1999-ம் ஆண்டு முதல் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டும், இறுதி முடிவு மற்றும் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

கடந்த காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 4,000 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

இதையடுத்து, திருப்போரூர், பரந்தூர், பண்ணூர், படாளம் உள்ளிட்ட இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. சுமார் 5,746 ஏக்கர் பரப்பில் ரூ.29,143 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் பரந்தூர் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்றும், தங்களது வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதே மாற்று முடிவுக்கான முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் தற்போது கவனத்துக்கு வந்துள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் முதற்கட்ட ஆய்வுகளை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் குழு ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இரண்டு இடங்களையும் நேரில் ஆய்வு செய்து, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இறுதி இடம் முடிவு செய்யப்படும்.

எனினும் புதிய இடத்திலும் நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. செய்யூர் பகுதியில் வான்வெளி தொடர்பான பாதுகாப்பு அனுமதிகள் தேவைப்படலாம் என்றும், மணலூரிலும் சில தொழில்நுட்ப சவால்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனால், சென்னையின் 2-வது விமான நிலையம் இறுதியாக எந்த இடத்தில் அமையும் என்பது இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வு அறிக்கைக்குப் பிறகே தெரியவரும்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் விற்றுத்தீர்ந்தது வெங்காயம்! 1,000 டன் கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share