×
 
☰

சென்னை சாலையில் பைக் சாகசம்?! அடுத்த நாளே 16 பேர் கைது! 67 வாகனங்கள் பறிமுதல்! அதிரடி காட்டிய போலீஸ்!

இதுவரை மொத்தம் 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 16 பேரை சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் பைக் சாகச காட்சிகள் வேகமாக பரவிய நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 4-ம் தேதி அதிகாலை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பகுதியில் சுமார் 15 முதல் 20 பேர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் சென்றதாக கூறப்படுகிறது. வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் அவர்கள் ஈடுபட்டதாகவும், இதனால் சாலையில் சென்ற பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் சாகசத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டதால் அதிர்ச்சி! நடுவழியில் தவித்த பயணிகள்! சேவை நிறுத்தம்!

அதன் தொடர்ச்சியாக 16 பேர் கைது செய்யப்பட்டதுடன், சாகசத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 11 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகனத் தணிக்கையில், பதிவு எண் பலகை இல்லாமல் இயக்கப்பட்ட மேலும் 56 இருசக்கர வாகனங்கள் சிக்கின. இதனால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சிலரை கண்டறிய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வீலிங், பைக் ரேஸ் அல்லது பிற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் இதுபோன்ற விதிமீறல்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share