கஞ்சா விற்பனையில் மோதல்?! சென்னை ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது! பகீர் பின்னணி!
சென்னை வானகரத்தில் ரவுடி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை வானகரம் அருகே ரவுடி ஒருவரின் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா விற்பனை தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வானகரம் அடுத்த துண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜி (26). ஆட்டோ ஓட்டி வரும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், வானகரம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இரவு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், ராஜ்குமார் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களில் தீ வைத்து வீசியுள்ளனர். அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு பெட்ரோல் குண்டுகளும் வீட்டின் முன்பகுதியில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்தன.
இதையும் படிங்க: 7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்பு!! 371 புகார்களுக்கு உடனடி தீர்வு! மாஸ் காட்டும் சிங்கப்பெண் அதிரடிப்படை!
வெடிப்பு சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் வாசல் பகுதியில் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானகரம் போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார் மற்றும் மற்றொரு தரப்பினர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முன்விரோதத்தின் காரணமாக ராஜ்குமாரை அச்சுறுத்தும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜீவா (20), ராகுல் (21), கோகுல் (23) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பரத் உள்ளிட்ட சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ரவுடி மோதல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சின் பின்னணியில் உள்ள முழு காரணம் மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மசாஜ் சென்டர் நடத்த மாமூல் வசூல்!! வசமாய் சிக்கிய பெண் போலீஸ்கள்!! சென்னையில் பரபரப்பு!