கோவையில் பகீர் கொலை! நண்பரின் முகத்தில் மிளகாய்ப்பொடி வீசி சரமாரி கத்திக் குத்து! அதிர்ச்சி சம்பவம்!
அப்போது கந்தசாமி அந்தப் பகுதியில் தனது வலது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை அருகே நண்பரின் முகத்தில் மிளகாய்ப்பொடியை வீசி நிலைகுலையச் செய்துவிட்டு, அவரை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கு பின்னர் தப்பியோடிய நபர், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ், 62. பாக்குமட்டை வியாபாரம் செய்து வந்த இவர் திமுக பிரமுகராகவும் இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி, 65, என்பவரும் திமுக பிரமுகர். இருவரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நாகராஜுக்கும் தனது மனைவிக்கும் தவறான தொடர்பு இருக்கலாம் என கந்தசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்? வங்கதேசத்தில் இந்து ஆசிரியர் குடும்பமே கொலை; 2 பேர் கைது!
நேற்று காலை நாகராஜ் டீ வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்றபோது, கந்தசாமி திடீரென அவரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. நாகராஜ் வாகனத்தை நிறுத்துவதற்குள் அவரது முகத்தில் மிளகாய்ப்பொடியை கந்தசாமி வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் நிலைகுலைந்த நாகராஜ் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கந்தசாமி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. கழுத்து, தலையின் பின்பகுதி, வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் 13-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கந்தசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தகவல் கிடைத்ததும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கந்தசாமியை பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது கந்தசாமி அந்தப் பகுதியில் தனது வலது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம், சம்பவத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் கந்தசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களாக பழகிய இருவருக்கிடையே ஏற்பட்ட சந்தேகம், இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் நரசீபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒடிசா பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சூட்கேஸில் உடல் பாகங்கள்! கூடுவாஞ்சேரி கொலையில் திடுக் திருப்பம்!