×
 

கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!

பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யவும், கோவை நகரில் சட்டம்-ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும், அமைதியான நகரம் என்றும் அழைக்கப்பட்ட கோவை, தற்போது குற்றங்களின் நகரமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 36 நாட்களில் மட்டும் 11 கொலைகள் நடைபெற்றிருப்பது, கோவை மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

பழிவாங்குதல், போதைப்பொருள் மற்றும் மதுபோதையால் ஏற்படும் தகராறுகள், பாலியல் வன்முறை, மாணவர்களுக்கு இடையேயான மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடைபெற்ற இந்த தொடர் கொலைச் சம்பவங்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தொடர் கொலைகளின் முதல் சம்பவமாக, ஆகஸ்ட் 3-ஆம் தேதி பீளமேடு பகுதியில் சென்னையைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், 8 பேரைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கொலை நகரமா? கொங்கு நகரமா?... ஒரே மாதத்தில் 9 கொலைகள்... குலை நடுங்கும் கோவை மக்கள்..!

நவீன் கொலை சம்பவத்தின் அதிர்ச்சியே விலகாத நிலையில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்தவர்கள், சம்பவத்தை செல்ஃபி மற்றும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தனியார் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களாலேயே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் 13-ஆம் தேதி பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, 17 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மேலும் எழுப்பியது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே நான்கு கொலைகள் நடைபெற்றது பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதன் பின்னரும் குடும்பத் தகராறு, மதுபோதை மற்றும் வாய்த்தகராறு உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதால், மக்களிடையே பீதி மேலும் அதிகரித்தது.

ஆகஸ்ட் 18-ஆம் தேதி சிங்காநல்லூரில் கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர், அவரது உறவினர் சிவக்குமாரால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 19-ஆம் தேதி சூலக்கல் பகுதியில் செந்தில்குமார் என்ற ஓட்டுநர், கண்ணன் என்பவரால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

அதே ஆகஸ்ட் 19-ஆம் தேதி சோமனூர் டாஸ்மாக் கடை அருகே தேவதாஸ் என்பவர் அவரது நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீலம்பூர் அருகே தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி, பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் 28-ஆம் தேதி ஆலாந்துறையில் 60 வயதான நாகராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

செப்டம்பர் மாதம் தொடங்கிய பின்னரும் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை முடிவுக்கு வரவில்லை. மாறாக, அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது போலீஸாருக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

செப்டம்பர் 7-ஆம் தேதி சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தகரக் கொட்டகையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு மறுநாளே, செப்டம்பர் 8-ஆம் தேதி ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து செட்டிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் போலீஸார் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஒருகாலத்தில் அமைதியான நகரமாக விளங்கிய கோவையில், தற்போது சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு சட்டம் மற்றும் போலீஸார் மீது போதிய அச்சம் இல்லாததே இதுபோன்ற தொடர் கொலைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, போலீஸார் இனியும் தாமதிக்காமல் இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதை மற்றும் வன்முறை கலாசாரத்தைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோவை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பொதுமக்களின் அமைதியை உறுதி செய்யவும், கோவை நகரில் சட்டம்-ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share