முதல்வர் ஸ்டாலின் வீடு, காரில் வெடிகுண்டு வச்சிருக்கேன்! போன் போட்டு மிரட்டிய வாலிபர்! தட்டித்தூக்கிய போலீஸ்!!
போலீஸாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தாம்பரம் சேலையூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (29) என்பது தெரிய வந்தது.
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் போலி என தெரியவந்த நிலையில், மதுபோதையில் அழைப்பு விடுத்த இளைஞரை போலீசார் கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) மாலை, எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பில் பேசிய நபர் தன்னை வினோத்குமார் என அறிமுகப்படுத்திக்கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் அவரது காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் கூறினார். பின்னர் அவர் தொடர்பை துண்டித்துவிட்டார்.
இந்த தகவல் கிடைத்தவுடன் கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதன்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு விரைந்தனர்.
இதையும் படிங்க: 21 வருஷம் தலைமறைவு… பெயர் மாத்தி, சாம்பிராணி ஊதி தப்பித்த கொலைகாரன்! SIR படிவத்தால் தட்டித்தூக்கிய போலீஸ்!
முதல்வரின் காரையும் உள்ளிட்டு பல மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இது வெறும் போலி மிரட்டல் என உறுதியானது.
போலீசாரின் தொழில்நுட்ப விசாரணையில், அழைப்பு தாம்பரம் அருகே சேலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (29) என்பவரிடமிருந்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வினோத்குமார் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. தன்னை சிலர் தாக்கியதாக அவர் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரத்தில் காவல் துறையினரை பழிவாங்கும் நோக்கில் இந்த மிரட்டல் அழைப்பை விடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
போலீசார் வினோத்குமாரை கண்டித்து எச்சரிக்கை செய்து, எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். இதுபோன்ற போலி மிரட்டல்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதோடு, போலீசாரின் நேரத்தையும் வளங்களையும் வீணடிப்பதாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அவ்வப்போது வரும் இதுபோன்ற மிரட்டல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: DOG லவ்வர்ஸ்!! ரூ.1 லட்சம் வரை அபராதம்! சென்னையில் நாய் வளர்ப்புக்கு புதிய கட்டுப்பாடு!