நீ எல்லாம் எங்க வீட்டுக்கு வர கூடாது.. 7 வயது சிறுமி மீது தாக்குதல்.. கொடூர மூதாட்டி கைது..!
வீட்டிற்கு விளையாட வந்த 7 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி, சாலையில் வீசி சென்ற மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். பலத்த காயமடைந்த சிறுமிக்கு சிகிச்சை நடக்கிறது. ஏன் இந்த கொலைவெறி.? இந்த தொகுப்பில் காணலாம்..
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரபு (வயது 36). இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.அதிமுக நத்தம் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் அணி துணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இவரது மகளான பிரித்திகா (வயது 7) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த குழந்தை இவரது வீட்டிற்கு அருகில் உள்ள கர்நாடகாவில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ராமசாமி மகன் செல்வம் என்பவரின் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் அடிக்கடி சென்று விளையாடுவது வழக்கம். அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அந்த வீட்டில் உள்ள செல்வத்தின் தாய் குருவம்மாள் (வயது 65) என்ற மூதாட்டி இங்கெல்லாம் வந்து என் பேரன் பேத்திகளுடன் விளையாட வரக்கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் செல்வம் தனது குடும்பத்தினருடன் கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் ஏதும் அறியாத பச்சிளம் குழந்தையான சிறுமி பிரித்திகா மீண்டும் விளையாடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சிறுமி வருவதை பார்த்த மூதாட்டி உன்னைத்தான் இங்கு விளையாட வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறேனே? மீண்டும் ஏன் வருகிறாய்? எனக் கூறி ஏதுமறியாத பச்சிளம் குழந்தையை இரும்பு கம்பியால் கொலை வெறி கொண்டு தாக்கி உள்ளார்.
இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கு ரெண்டகம்.. ஆறரை பவுன் நகைக்காக கொலை.. விஏஓ கதையை முடித்த சிறுவன்..!
மேலும் சிறுமியின் முகத்தில் கையால் குத்தியதில் சிறுமியின் முகம் வீங்கிய நிலையில் மயக்கமடைந்து விட்டார். படுகாயம் அடைந்த சிறுமியை மூதாட்டி சாலையில் தூக்கி வீசி சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்த சிறுமியை பார்த்தவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பதறியபடி வந்த பெற்றோர் சிறுமியை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். சிறுமியை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதி சென்று விட்டனர் என நினைத்திருந்த வேளையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் கண் விழித்த சிறுமி தன்னை தாக்கியது மூதாட்டி குருவம்மாள் தான் என தனது பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இது நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நத்தம் போலீசார் மூதாட்டி குருவம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் .விசாரணைக்குப் பின்பு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 7 வயது சிறுமியை மூதாட்டி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பச்ச பிள்ளையை இப்படியா பண்ணுவ.. 2½ வயது குழந்தைக்கு சூடு.. அங்கன்வாடி ஊழியர் அடாவடி..!