×
 

காப்பு காட்டில் யானை வேட்டை.. தருமபுரியில் புதிய வீரப்பன்..? கைதாகி தப்பியவர் சடலமாக மீட்பு..!

தருமபுரி அருகே யானையை வேட்டையாடி தந்தம் கடத்திய வழக்கில் கைதாகி தப்பியவர், காப்புக்காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் காப்புக்காடு கோடுபாவி பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஆண் யானை இறந்து கிடந்தது. அந்த யானை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்ட பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கடந்த மார்ச் 1-ம் தேதி 5 தனிப்படைகள் அமைத்து யானை வேட்டை கும்பலை தேடி வந்தனர். தனிப்படைகளின் தீவிர விசாரணையில் ஏமனூர் காவிரியாற்றின் மறுகரையில் உள்ள கொங்கரப்பட்டி, கோவிந்தப்பாடி கிராமங்களைச் சேர்ந்த விஜய்குமார் (வயது 24), கோவிந்தராஜ் (வயது 54), தினேஷ்(வயது 26), செந்தில் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் வனத் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் ரூ.13 லட்சம் பணம் கொடுப்பதாக தந்தம் விற்பனையில் ஈடுபடும் இடைத் தரகர்கள் கூறியதை ஏற்று, கோடுபாவி வனப்பகுதியில் யானையை சுட்டுக் கொன்று தந்தங்களை வெட்டி எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

கர்நாடகா மாநிலம் செங்கப்பாடி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் மரத்தில் இருந்தபடி யானையை துப்பாக்கியால் சுட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, யானையை வேட்டையாடியது குறித்து செயல்முறையாக விவரிக்கும்படி செந்திலை மார்ச் 18-ம் தேதி வனத் துறையினர் வனப் பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். 

இதையும் படிங்க: தமிழக பாஜக தலைவர் பதவி... நமக்கேன் வம்பு..? உண்மையை உடைத்த அண்ணாமலை..!

அப்போது, வேட்டையில் ஈடுபட்ட விதத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருந்த செந்தில், வனத்துறையினரை ஏமாற்றி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, வனத்துறை பணியாளர்கள் சிலர் கூறும்போது, கைகளில் விலங்கிடப்பட்டிருந்த செந்தில், யானை வேட்டையின்போது செயல்பட்ட விதம் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார்.

இந்த காட்சிகளை வனத்துறை பணியாளர்கள் வீடியோ பதிவு செய்தனர். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அருகிலிருந்த பெரிய பள்ளத்தில் குதித்த செந்தில் காட்டுக்குள் ஓடி மறைந்தார். அப்போது செந்திலை எச்சரித்தபடி வனத்துறை அதிகாரிகள் அவர் தப்பியோடிய திசையில் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். 

இருப்பினும், அடர்ந்த மரங்களுக்கு இடையே மறைந்தபடி லாவகமாக செந்தில் தப்பி விட்டார். தப்பியோடிய செந்தில் சொந்த கிராமமான கோவிந்தப்பாடி புதூர் பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு கடையில் இருந்து அவரது குடும்பத்தாரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையறிந்த அவரை தீவிரமாக வனத்துறை பணியாளர்கள் தேடி வருகின்றனர். இதற்கிடையில், வனத் துறையினரின் கோபத்துக்கு உள்ளாகி செந்தில் துப்பாக்கியால் சுடப்படலாம் என்ற தேவையற்ற அச்சத்தால் செந்திலின் உறவினர்கள் செந்திலுக்கு முன் ஜாமீன் பெற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்  என தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இன்று ஏப்ரல் 5-ம் தேதி ஏரியூர் அடுத்த கொங்கரப்பட்டி வனப் பகுதியில் செந்தில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். செந்திலின் உடல் மீது நாட்டு துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. செந்திலின் குடும்பத்தார், அது செந்திலின் உடல் தான் என நேரில் பார்த்து உறுதி செய்துள்ளனர். இருப்பினும், அழுகிய நிலையில் மீட்கப்பட்டது செந்திலின் உடல் தான் என்பதை உறுதி செய்திட டிஎன்ஏ உள்ளிட்ட சோதனைகளுக்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share