×
 

ஜெயலலிதாவின் போட்டோவை எப்படி அகற்றுவேன்! அரசியலை விட்டே போறேன்! திடீர் ட்விஸ்ட் அடித்த குன்னம் ராமச்சந்திரன்!

ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், குன்னம் ராமச்சந்திரனும் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெரம்பலூர்: தமிழக அரசியலில் தொடர் அதிரடி முடிவுகள் நீடிக்கும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அதிமுக நிர்வாகி குன்னம் ராமச்சந்திரன், திமுகவில் இணையும் திட்டத்தை கைவிட்டு அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெரம்பலூரில் உள்ள தனது வீட்டில் இன்று (ஜனவரி 22, 2026) செய்தியாளர்களை சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், தனது முடிவை விரிவாக விளக்கினார். அவர் கூறியதாவது:

"நேற்று முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்திடம் திமுகவில் இணைவது குறித்து பேசினேன். அப்போது என் வீட்டில் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். நான் பேச்சு முடித்து வீட்டிற்கு வந்தபோது, ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

இதையும் படிங்க: முடிவெடுக்க முடியாம திணறும் ஓபிஎஸ்! நானும் திமுக போறேன்!! குன்னம் ராமச்சந்திரன் கொடுத்த ஷாக்!

என்னை பெற்றெடுத்த தாய், 'ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்தில் இருந்து அகற்றப் போகிறாயா?' என்று கேட்டார் (அதாவது திமுகவில் இணைந்தால் ஸ்டாலின் படத்தை வைக்க வேண்டியதுதானே என்ற கேள்வி). இந்த கேள்வி என் மனதை மிகவும் பாதித்தது" என்று கூறும்போது ராமச்சந்திரன் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

தொடர்ந்து அவர், "என் மகள் 'இப்படி கட்சி மாறுவது ஒரு வேலையா?' என்று கேட்டாள். இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு, உடல்நல பாதிப்பு ஆகியவற்றால் இன்று மாற்று முடிவு எடுத்துள்ளேன்.

நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன். நேற்று ஒரு பேச்சு, இன்று மாற்றி ஒரு பேச்சு என்று சொல்லப்படுவது தவறு என்றாலும், குடும்ப நிம்மதிக்காக திமுக இணைப்பு முடிவை கைவிடுகிறேன். இனி எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்கப் போவதில்லை.

வைத்திலிங்கமும், என்னுடன் பயணித்த அதிமுக தொண்டர்களும் என்னை மன்னித்து விட வேண்டும். என்னுடன் உறுதுணையாக இருந்த தொண்டர்கள் அவரவர் விரும்பும் அணியில் இணைந்து பணியாற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி மாற்றங்கள், கூட்டணி அதிரடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் திடீரென திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்தது, அமமுக-அதிமுக இணைப்பு போன்றவை அரசியல் களத்தை குழப்பமாக்கியுள்ளன.

இந்நிலையில் வைத்திலிங்கத்தைப் போலவே குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடும்ப எதிர்ப்பு காரணமாக அவர் அரசியலை விட்டே விலகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து ஓபிஎஸ் தரப்பின் மற்றொரு முக்கிய நிர்வாகியான வெல்லமண்டி நடராஜன் என்ன முடிவு எடுப்பார் என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
 

இதையும் படிங்க: மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய்!! காங்கிரஸ் நிர்வாகி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share