நீட் தேர்வை ரத்து செஞ்சீங்களா? திமுக என்ன சாதிச்சது? இபிஎஸ் சரமாரி கேள்வி..!
சட்டப்பேரவை நீட் தேர்வு தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஒரு நீண்டகால சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுக, தங்கள் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக ஒரு வாக்குறுதியை அளித்தது. “நீட் தேர்வை ஒழிப்போம்” என்று. அன்றைய சூழலில், ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் மீது நீட் கொண்டு வரும் அழுத்தம், சமத்துவமின்மை, தற்கொலை சம்பவங்கள் என்பவை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டன.
திமுக அந்த உணர்வுகளை முழுமையாகப் பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருக்காது என்று மக்களிடம் உறுதியளித்தது. அந்த வாக்குறுதி எண் 55 என்று குறிப்பிடப்பட்டது, மேலும் அது மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. நீட் தேர்வு இன்றும் தொடர்கிறது.
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்களே அடிப்படையாக இருக்கின்றன. திமுக அரசு சட்டமன்றத்தில் இருமுறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பலமுறை மத்திய அரசை விமர்சித்து, இது கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் மீதும் அடக்குமுறை... ஃபாசிஸ்ட் மனநிலை தான்...! EPS கண்டனம்..!
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார். நீட் தேர்வை ஒழிப்பேன் என்று கூறினீர்களே செய்தீர்களா என்று சரமாரி கேள்விகளை கேட்டார். நீட் விவகாரத்தில் திமுக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு என்ன சாதித்தது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: சொத்தை பழம் போல் பட்ஜெட்...! எல்லாம் ஏமாற்று வேலை... வறுத்தெடுத்த EPS..!