×
 

“உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஈரோடு அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில், வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டும் வகையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெண்ணின் முகம் மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 வாலிபர்கள் மற்றும் 17 வயது சிறுவன் என 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு அடுத்த வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன், 45. இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி, 43, அதேபோல் தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் கோபிநாத், 22, மேட்டுக்கடையில் உள்ள பட்டறை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை நடராஜன் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் கோபிநாத் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை தேடி 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். பொருளை வாங்கிக் கொடுக்கவில்லை என்றும், அதற்காக பெற்ற பணத்தையும் திருப்பி வழங்கவில்லை என்றும் கூறி கோபிநாத்திடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: 12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

பின்னர் கோபிநாத் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களுடன் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிய அவர், நள்ளிரவு 1.30 மணியளவில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரம் கழித்து வீட்டின் அருகே மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுள்ளது.

மகன் வந்துவிட்டதாக நினைத்த ஜோதி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர், ஜோதியையும் அவரது மகனையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீப்பற்றிய நிலையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை அவர்கள் வீட்டை நோக்கி வீசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜன்னலில் பட்டு பாட்டில் உடைந்ததில் பெட்ரோல் சிதறி, ஜோதியின் முகம் மற்றும் கழுத்தில் தீப்பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த ஜேக் என்ற நவீன், 21, உழவன் நகர் என்ஜிஜி ஓ காலனியை சேர்ந்த ஜீவானந்தம், 21, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். நள்ளிரவில் வீடு மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share