முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!
'ஆன்லைன்' முதலீடு தொடர்பாக, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம், மர்ம நபர்கள், 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகளிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி மூலம் சுமார் 2 கோடி ரூபாய் பணம் பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடு, நாட்டின் துணை ஜனாதிபதியாக பணியாற்றியவர். அவரது மகள் தீபா, சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக "சுவர்ண பாரத்" என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, தீபாவை தொடர்புகொண்ட சில மர்ம நபர்கள், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று நம்பவைத்துள்ளனர். ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகைக்கு லாபம் கிடைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியின் மின்மாற்றிகள் கொள்முதல் ஊழல்?! ஹார்டு டிஸ்க் திருட்டின் பின்னணியில் யார்? 3 தனிப்படை அமைப்பு!
இதனால் நம்பிக்கை அடைந்த தீபா, தொடர்ந்து பல கட்டங்களாக அதிக தொகைகளை முதலீடு செய்துள்ளார். பின்னர் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற முயன்றபோது, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகே அவர் மோசடிக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மொத்தமாக சுமார் 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மோசடியில் பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் மற்றும் இணைய தள பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மோசடி செய்த நபர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், மோசடியாக மாற்றப்பட்ட பணத்தை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம், ஆன்லைன் முதலீடுகள் தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு! சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!