பெண் அதிகாரிகள் கூட்டாக தில்லுமுல்லு.. லஞ்ச பணத்தில் கறார்.. கம்பி எண்ணும் மின்வாரிய ஆபிசர்ஸ்..!
அரக்கோணம் அருகே வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றித்தர 1 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்ட 3 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியில் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி செயற்பொறியாளராக 57 வயதான புனிதா என்பவரும், வணிக ஆய்வாளராக 33 வயதான மோனிகா என்பவரும், போர்மேனாக 58 வயதான பல்கிஸ் பேகம் என்பவரும் பணியில் உள்ளனர்.
அரக்கோணம் அருகே அம்மனூரை சேர்ந்த சரவணன் என்பவர், வீட்டின் பக்கத்தில் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டு இணைப்பை வணிக இணைப்பாக மாற்றி தரக் கோரி உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். மின் இணைப்பை மாற்றி தர 3 அதிகாரிகளும் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமா என மலைத்த சரவணன், வேறு வழியின்றி முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மின் இணைப்பை மாற்றித் தந்ததும் எஞ்சிய 50 ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தால்தான் மின் இணைப்பை வணிக இணைப்பாக மாற்றித் தருவோம் என அதிகாரிகள் கறாராக சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியின்றி அவசரம் அவசரமாக 25 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கினார் சரவணன். லஞ்சம் கொடுக்க மின்வாரிய அலுவலகத்துக்கு சரவணன் சென்று உள்ளார். ஆனால் கடன் வாங்கி லஞ்சம் கொடுக்க வேண்டுமா? என கடைசி நேரத்தில் அவர் தனதை மனதை மாற்றிக் கொண்டார்.
இதையும் படிங்க: ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!
பணம், பணம் என்று அலையும் பெண் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார். ராணிப்பேட்டையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தார். உடனே சரவணன் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளில் ரசாயனம் தடவி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற சரவணன், 25,000 ரூபாயை புனிதா, மோனிகா, பல்கிஸ் பேகம் ஆகியோரிடம் கொடுத்தார். அலுவலகத்தி்ன் வெளியே தயாராக நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புனிதா அறைக்குள் சென்று மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
நீண்ட நேரம் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல வித கோரிக்கைகளுடன் மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் மக்களிடம் கூட்டாக சேர்ந்து லஞ்சம் வாங்கி, பிரித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்தனர்.
அரக்கோணம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் புனிதா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மூவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. நீதிபதி முன் புனிதா, மோனிகா, பல்கிஸ் பேகம் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..!