விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் அதிகரிப்பு? அடுத்த 4 மாதங்களுக்கு சுங்கத்துறை ‘அலர்ட்’!
பண்டிகை காலம் மற்றும் ஆண்டு இறுதி நெருங்குவதால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் சூழலை பயன்படுத்தி, கடத்தல் கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளை அதிகரிக்கலாம் என உளவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக தங்கம் சட்டவிரோதமாக கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த நான்கு மாதங்களுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு சுங்கத்துறை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினருக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் மூலம் பல்வேறு வழிகளில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை காலம் மற்றும் ஆண்டு இறுதி நெருங்குவதால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் சூழலை பயன்படுத்தி, கடத்தல் கும்பல்கள் தங்களது நடவடிக்கைகளை அதிகரிக்கலாம் என உளவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் முக்கிய துறைமுகங்களில் பயணிகளின் உடைமைகள் மற்றும் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்படும் பயணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும், தேவையான இடங்களில் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.1.88 கோடி!! உள்ளாடைக்குள் மறைத்து தங்க பேஸ்ட் கடத்தல்! டெல்லி ஏர்போர்ட்டில் சிக்கிய வங்கதேச பயணி!
பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதில் நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், உடைகள், மின்னணு சாதனங்கள், பயணப்பைகள் உள்ளிட்டவற்றில் மறைத்து கொண்டு வரப்படும் தங்கத்தை கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது.
பண்டிகை காலங்களில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி கடத்தலை மேற்கொள்ளும் முயற்சிகள் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் சுங்கத்துறை மற்றும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், சட்டவிரோதமாக தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யும் முயற்சிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கடத்தல் முயற்சிகளை தடுக்கும் வகையில் அடுத்த சில மாதங்களில் விமான நிலையங்களில் சோதனைகள் மேலும் கடுமையாக்கப்பட உள்ளன.
இதனால், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகள், சுங்க விதிமுறைகளை முறையாக பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி தங்கம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மீனவர்களை எதிர்த்து தலைமைச் செயலகம் கட்டினால், அது மீண்டும் மருத்துவமனையாகத்தான் மாறும்! ஜெயக்குமார் எச்சரிக்கை!