×
 

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா?? பாலினத்தை கண்டறிய ரூ.10 ஆயிரம்? கையும் களவுமாக சிக்கிய 2 பேர்!

அவர்களிடம் ஸ்கேன் கருவி மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கான மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை பகுதியில் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறியும் வகையில் ஸ்கேன் செய்ய முயன்றதாகக் கூறப்படும் 2 பேரை மருத்துவக் குழுவினர் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிதல், சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போலி மருத்துவர்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது, போச்சம்பள்ளியைச் சேர்ந்த எஸ்தர் என்பவர் சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் திட்டமிட்டு அவரை அணுகியுள்ளனர்.

இதையும் படிங்க: இனி ஸ்கூலுக்கே போக மாட்டேன்… அழுதபடி வந்த 10 ஆம் வகுப்பு மாணவி; சில்மிஷ ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!

ராயக்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்வதற்காக எஸ்தர் வந்தபோது, அவருடன் குருமூர்த்தி என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்கேன் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் கட்டணம் கேட்கப்பட்டதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் இருவரும் ஸ்கேன் கருவியை வைத்து பரிசோதனை செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்கு கர்ப்பிணிகள் சிலர் இருந்த நிலையில், அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக வீட்டுக்குள் நுழைந்தனர்.

அப்போது எஸ்தர் மற்றும் குருமூர்த்தி ஆகிய இருவரையும் மருத்துவக் குழுவினர் பிடித்தனர். அவர்களிடம் ஸ்கேன் கருவி மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கான மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இருவரும் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், எஸ்தர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், குருமூர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஸ்கேன் கருவி மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறியும் நடவடிக்கைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற செயல்களைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share