விண்ணில் சீறியது இஸ்ரோவில் பாகுபலி! வெற்றிகரமாக வானில் பாய்ந்தது புளூடேர்ட் -6 ! இஸ்ரோ சாதனை!
அமெரிக்க நாட்டின் செயற்கைக்கோளை சுமந்தபடி பாகுபலி ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிக ரீதியிலான மற்றொரு மைல்கல்லாக, அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்துக்கான ப்ளூபேர்ட்-6 (ப்ளூபேர்ட் பிளாக்-2) நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 24-ம் தேதி காலை 8.54 மணிக்கு இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் (பாகுபலி ராக்கெட்) விண்ணை நோக்கி பாய்ந்தது. இந்த ஏவுதல் முழு வெற்றி அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.
இஸ்ரோவின் வணிகப் பிரிவான என்எஸ்ஐஎல் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. சுமார் 6,100 கிலோ எடை கொண்ட இந்த ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை எல்விஎம்-3 ராக்கெட்டில் செலுத்தியதிலேயே அதிக எடை கொண்ட வெளிநாட்டு செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நவம்பர் மாதம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள் 4,400 கிலோ எடை கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடங்கியது கவுண்டவுன்!! அமெரிக்க செயற்கோளை சுமந்தபடி நாளை விண்ணில் பாய்கிறது பாகுபலி!
ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள் சுமார் 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், விண்வெளியில் இருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்குவதாகும்.
இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், கடல் பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்பு, குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். இது உலகளாவிய தகவல் தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவுதலுக்கு 24 மணி நேரங்களுக்கு முன்பாக டிசம்பர் 23-ம் தேதி காலை கவுன்ட்டவுன் தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் துல்லியமாக நிறைவடைந்தன. ராக்கெட் ஏவப்படுவதை நேரில் காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சியகத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவுதலை நேரில் கண்டு ரசித்தனர்.
இந்த வெற்றிகரமான ஏவுதல் இஸ்ரோவின் வணிக ரீதியிலான திறனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகள் இஸ்ரோவின் ராக்கெட்களை நம்பி செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன. இஸ்ரோவின் இந்த சாதனை இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நாளை மறுநாள் விண்ணில் பாயும் அமெரிக்க செயற்கைகோள்! திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வழிபாடு!