ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!
ஜனநாயகன் லீக் ஆன விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக இழுபறி நிலவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த அரசியல் ஆக்ஷன் படம், கடந்த ஜனவரி 9 அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.
படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தனி நீதிபதி 'யூ/ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது. பின்னர் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று, சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப ஒப்புக்கொண்டது.
மறு ஆய்வுக் குழு படத்தை பார்த்து பரிந்துரை செய்த நிலையிலும், சில சமயங்களில் தேர்தல் ஆணையத்திடம் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது படத்தின் வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியது. அதற்குள் ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது. அதன் முழு படமும் HD தரத்தில் இணையத்தில் லீக் ஆனது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டின் தீவிரம், விசாரணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஜனநாயகன் ரிலீஸ்..? இன்று முடிவை சொல்லும் தணிக்கை வாரியம்..!