வங்கி ஏ.டி.எம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளை..!! போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேர் கைது..!!
கர்நாடகாவின் பெங்களூருவில் வங்கி ஏடிஎம் வாகனத்தை வழிமறித்து ரூ.7.11 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவின் பெங்களூருவில் பகலில் நடந்த பெரும் கொள்ளை சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.7.11 கோடி கொள்ளையில் இருந்து ரூ.5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 19ம் தேதி அன்று மதியம் ஜே.பி. நகரில் உள்ள தனியார் வங்கி கிளையில் இருந்து ஏ.டி.எம்.களுக்கு பணம் கொண்டு சென்ற வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சொகுசு காரில் வந்த 4-5 பேர் வேனை வழிமறித்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று சொல்லி, வேனில் இருந்த ஊழியர்களை மிரட்டினர். வேனில் இருந்த ரூ.7.11 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு, தங்கள் காரில் ஏற்றி டெய்ரி சர்க்கிள் அருகே காரை நிறுத்தினர். அங்கு வங்கி ஊழியரை கீழே தள்ளிவிட்டு, அருகிலுள்ள பாலத்தில் வேனுடன் தப்பினர்.
அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர் உடனடியாக போலீஸிடம் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தெரிவித்ததாவது: “சம்பவத்தைத் தொடர்ந்து 11 குழுக்களும், 200 போலீஸாரும் ஈடுபட்டு விசாரணை செய்தனர். 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினோம். வேனின் பொறுப்பாளர், சி.எம்.எஸ். இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், கோவிந்தாபுரா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த கான்ஸ்டபிள் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ரூ.5.76 கோடி மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையைத் தேடி வருகிறோம்.”
இதையும் படிங்க: மேகதாது அணைக்கு அனுமதியா? வாய்ப்பே இல்ல... திட்டவட்டமாக மறுக்கும் அமைச்சர் துரைமுருகன்…!
கொள்ளையர்கள் 3 மாதங்களாக திட்டமிட்டு, 15 நாட்கள் முன் சாலை ஆய்வு செய்ததாகத் தெரியவந்துள்ளது. கொள்ளை நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்களை கண்டுபிடித்து, கோவா மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு 6 குழுக்களை அனுப்பியுள்ளனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க விசாரணை தீவிரமாக நடக்கிறது.
இந்த கொள்ளை, பெங்களூருவின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. போலீஸ், 54 மணி நேரத்தில் கைது செய்ததை பெருமையாகக் கூறுகிறது. விசாரணை தொடர்ந்து, மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உங்க குடும்பத்தொழில் தான் முக்கியமா? தமிழக உரிமையை மீட்டு எடுங்கள்... இபிஎஸ் விளாசல்...!