×
 

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு... பகீர் ரிப்போர்ட்!

ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 193 பேருக்கு பரிசோதனை செய்ததில் 32 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்த நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது கர்நாடகத்திலும் புதிய கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், மாநில சுகாதாரத்துறை கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 14 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஜூலை மாதம் பாதி முடிவடைவதற்குள் அந்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட 193 மாதிரிகளின் பரிசோதனையில் 32 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.

இதற்கு முன்பாக ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து அங்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். நோய் பரவலை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தும் நோக்கில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: மக்களே உஷார்! ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா! மத்திய அரசு அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கர்நாடக சுகாதாரத்துறை கமிஷனர் குருதத் ஹெக்டே, தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் பெரும்பாலும் லேசான அறிகுறிகளைக் கொண்டவை என்றும், நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், நிலைமையை சுகாதாரத்துறை தினசரி கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேநேரத்தில், காய்ச்சல், இருமல், சளி அல்லது சுவாசப் பிரச்சினை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும், தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், மக்கள் தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவது, தேவையான இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் உடல்நல அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share