கேரளா வீடியோ விவகாரம்.. இளம்பெண் ஷிம்ஜிதா சிறையில் அடைப்பு!
கேரளாவில் பேருந்து பயணத்தின் போது இளைஞர் ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டைச் சுமத்தி, அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள மாநிலத்தையே உலுக்கிய இளைஞர் தீபக்கின் தற்கொலை விவகாரத்தில், தற்போது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, தன் அருகில் அமர்ந்திருந்த தீபக் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடும் நெருக்கடிக்கு உள்ளான தீபக், மனமுடைந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
தீபக்கின் மரணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஷிம்ஜிதா வெளியிட்ட வீடியோவில் இருந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை என்பதும், அந்த இளைஞர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஷிம்ஜிதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவை இன்று கைது செய்த போலீசார், அவரை குன்னமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஷிம்ஜிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தவறான வீடியோ பதிவினால் அப்பாவி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தத் துரிதமான கைது நடவடிக்கையைப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களை ஆயுதமாகப் பயன்படுத்தித் தனிநபர் ஒழுக்கத்தைச் சிதைப்பவர்களுக்கு இந்தச் சிறைத் தண்டனை ஒரு தகுந்த பாடமாக அமையும் எனச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளா வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!! எப்போ..?? எதுக்கு தெரியுமா..??
இதையும் படிங்க: “மின்கசிவா? சதிச்செயலா?” திருச்சூரில் ரயில் இன்ஜின் வரை பரவிய தீ; போலீஸார் தீவிர விசாரணை!