×
 
☰

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை?! LPU பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் வெடித்த போராட்டம்!

லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக நிர்வாகமும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாக்வாராவில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில், மாணவி தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய உறுதி செய்யப்படாத தகவலைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் பின்னர் வன்முறையாக மாறி, பல்கலைக்கழக வளாகத்தில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், ஜலந்தர்–பாக்வாரா தேசிய நெடுஞ்சாலையிலும் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. இந்த தகவல் மாணவர்களிடையே வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டு விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற போராட்டம் பின்னர் தீவிரமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்தில் ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. சில இடங்களில் தீ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் ஜலந்தர்–பாக்வாரா தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவோ அல்லது அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகவோ கூறப்படும் தகவலுக்கு இதுவரை ஆதாரம் கிடைக்கவில்லை என்று கபூர்தலா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக நிர்வாகமும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் தங்களது விடுதி மற்றும் அறைகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வன்முறை அல்லது ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால், மாணவி தொடர்பான குற்றச்சாட்டு தற்போது உறுதி செய்யப்படாத தகவலாகவே உள்ளது. சம்பவத்தின் உண்மை நிலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உடனே நடவடிக்கை வேண்டும்! இந்து முன்னணி முக்கிய கோரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share