என்னை காப்பாத்துங்க! மருத்துவமனை ஊழியர்கள் என்னை கொன்று விடுவார்கள்! கர்ப்பிணியின் கதறல் வீடியோ!
மயக்க மருந்து வழங்கப்பட்ட பின்னர் கல்பனாவுக்கு மீண்டும் சுயநினைவு திரும்பவில்லை என்றும், அதிகப்படியான மருந்து வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரேவா: மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணியும், அவர் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் தனக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனக் கூறியதாக வெளியாகியுள்ள காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா. 25 வயதான இவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்க, அங்குள்ள சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபோது கல்பனா மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டதாகவும், தன்னை காப்பாற்றுமாறும், மருத்துவமனையில் இருந்து அழைத்துச் செல்லுமாறும் உறவினர்களிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வேன்... ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு!
அந்த வீடியோவில், கல்பனா அழுதபடி தனக்கு முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனக் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்களின் நடவடிக்கை குறித்து அவர் அச்சம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உறவினர்களை தொடர்புகொள்ள அவர் முயற்சித்த நிலையில், செவிலியர்கள் அவரை சமாதானப்படுத்தி வார்டில் இருக்குமாறு கூறிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில மணி நேரங்களில் கல்பனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிரசவத்துக்குப் பிறகு தாயும் பச்சிளம் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
கல்பனாவின் தந்தை ராம்ஷரன் மிஸ்ரா, தனது ஒரே மகளை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். மருத்துவமனையில் ஏற்பட்டதாக கூறப்படும் அலட்சியத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மயக்க மருந்து வழங்கப்பட்ட பின்னர் கல்பனாவுக்கு மீண்டும் சுயநினைவு திரும்பவில்லை என்றும், அதிகப்படியான மருந்து வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மருத்துவ நெறிமுறைகளின்படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவர்கள் தரப்பில் அலட்சியம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தாய் மற்றும் குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான காரணத்தை முழுமையாக கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், கல்பனாவின் கடைசி காணொளி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விசாரணை முடிவில் என்ன பதில் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! 107 இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கிறது தமிழக அரசு!