கதவை உடைத்து தூக்கிய போலீஸ்! அசால்டாக வெளியே வந்த சவுக்கு சங்கர்!! வைரலாகும் வீடியோ!
இதயப்பிரச்னை மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கும்படி அவரது தாய் கமலா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருவதால் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் முறையீடு செய்து ஜாமீன் பெற்று வெளிவருவது வழக்கமாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சென்னை போலீசார் ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக் கதவை உடைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். சினிமா தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதயப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அமர்வு, நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, வசிக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அப்போது கைது செய்த போலீசார் மீது நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: யுடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சவுக்கு சங்கர் மீது போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்குகளையும், உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கைதான சவுக்கு சங்கரை மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கியதாக குறிப்பிட்டனர். பார்லிமென்ட்டிலும் சட்டசபைகளிலும் எதிர்க்குரல்கள் அனுமதிக்கப்படுவதை போல, பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி கருத்து கூறுபவர்களை போலீசார் துரத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
ஆதாரமற்ற புகார்களுக்கு சிவில் வழக்கு தொடரலாம் என்றும், அதற்கு பதிலாக தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். போலீசார் பெரிய ஊழல் வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும், மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டத்தை தவறாக பயன்படுத்தி தனிநபர்களை குறிவைப்பது அதிகார துஷ்பிரயோகம் என்று கடுமையாக சாடினர்.
சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவது அதிகார துஷ்பிரயோகம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு 3 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சினிமா தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கில் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிசம்பர் 13இல் கைது செய்யப்பட்டு 14 நாட்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்தது பழிவாங்கல் நடவடிக்கை என்று நிரூபிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: யுடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!