×
 

கவினின் உடலை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்... நெல்லை மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குமார் உடலை இன்று பெற்றோர் வாங்க உள்ள நிலையில் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் காதல் விவகாரத்தின் காரணமாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நவீன காலத்திலும் சாதியை தூக்கி பிடித்து நடக்கும் இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று சாதியினரை காதலிப்பதே தவறு என்ற எண்ணத்தை திணிக்கும் விதமாக, பழி தீர்க்கும் விதமாக நடக்கும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தி வருகிறது. சாதி என்ற போர்வையில் இருந்து மெல்ல வெளிவந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சாதிய ஆணவ படுகொலைகள் மீண்டும் பல்லாண்டுகள் நம்மை பின்னோக்கி தள்ளும் விதமாகவே உள்ளது.

நெல்லையில் கவின் குமார் என்ற இளைஞர் கைநிறைய சம்பாதித்தும், தாய் தந்தையர் அரசுப் பணிகளில் இருந்தும், மாற்று சாதிப் பெண்ணை காதலித்த காரணத்தால் பெண்ணின் சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவரது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி போராடினர்.

இதையும் படிங்க: உடலை வாங்கிக்கிறோம்! ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் பெற்றோர் சம்மதம்...

கவினின் உடலை வாங்க மறுத்து, அவரது பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் செல்வி, உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முக்காணி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மூன்று நாட்களாகத் தொடர்ந்தது. அவர்கள், சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டும், அவர்களை காவல்துறை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கவினின் தந்தை சந்திரசேகர், செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது மகன் மாதம் 1.5 லட்சம் சம்பளம் வாங்கியவர். எங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், உடலை வாங்க மாட்டோம், என்று உருக்கமாகக் கூறினார். மேலும், இந்தக் கொலையில் சுர்ஜித்தின் பெற்றோருக்கும் பங்கு இருப்பதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவல்துறையினர், கவினின் உறவினர்களுடன் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அது தோல்வியில் முடிந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுபாஷினி தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று கவின்குமாரின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று கவினின் உடலை பெற்றோர் வாங்க உள்ளனர். பெரும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் அட்டூழியம் ... இளைஞர் ஓட, ஓட வெட்டிக் கொலை ... நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share