×
 

32 வீடு! 2 பண்ணை வீடு! ஏராளமான நகைகள்! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய அரசு பொறியாளர்!

ஒடிஷாவை சேர்ந்த அரசு உதவி பொறியாளர் ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தகவலின் அடிப்படையில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 32 வீட்டு மனைகள், இரண்டு பண்ணை வீடுகள் உட்பட ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின.

ஒடிஷாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு உதவி பொறியாளர் ஒருவரின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொராபுட் மாவட்டம் கோட்பாட் வட்டத்தை சேர்ந்த உதவி பொறியாளர் சத்யநாராயண் சேத் மீது, அவரது வருமானத்துக்கு ஒப்பிடும்போது அதிக அளவில் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவருக்கு சொந்தமான ஏழு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 32 வீட்டு மனைகள், இரண்டு பண்ணை வீடுகள், 40 சவரன் தங்க நகைகள், சுமார் 600 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 5.48 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊழலை கட்டுப்படுத்தி ரூ.20,000 கோடி கூடுதல் வருவாய்! அதிரடி திட்டத்துடன் களமிறங்கும் முதல்வர் விஜய்!

மேலும் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் வைப்புத் தொகைகள் இருப்பதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கணக்கீடு செய்து வருகின்றனர்.

ஒடிஷா மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகள் மீது சமீப காலமாக லஞ்ச ஒழிப்பு பிரிவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மற்றொரு அரசு அதிகாரியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தற்போது சத்யநாராயண் சேத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஒடிஷா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்கள் மீதான கண்காணிப்பும் தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை! பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share