×
 

ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு!! சபாநாயகர் அறையில் நடந்த மீட்டிங்!! தூண்டில் போடும் திமுக?!

சபாநாயகர் அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்ற நேரத்தில், அவரை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார்.

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று (ஜனவரி 24) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பதில் உரையுடன் முடிவடைந்தது. ஆனால், அதிமுக உறுப்பினர்கள் முழுமையாக கூட்டத்தை புறக்கணித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் எம்எல்ஏ அய்யப்பன் மட்டும் அவைக்கு வந்திருந்தனர். 

கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அறைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, அமைச்சர் சேகர்பாபு ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க.வில் இணையுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதிலாக, ஓ.பன்னீர்செல்வம் தனக்கும், ஆதரவு எம்எல்ஏ அய்யப்பனுக்கும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்க வேண்டும் என்றும், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா இடம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!

தி.மு.க. தரப்பில் இருந்து இந்த கோரிக்கைகளுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டால், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக செயல்பட்டு வந்த எம்எல்ஏக்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவது அதிமுகவுக்கு பெரும் இழப்பாக அமையும் என்று கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. 
அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இதுவரை அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும் வாய்ப்பை பெற முடியாத நிலையில், தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர்க்க முடியாத சூழலாக மாறியுள்ளது.

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்கள் மற்றும் சில வட மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். ஆனால், இந்த பேச்சுவார்த்தை எந்த முடிவுக்கு வரும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அடுத்த சில நாட்களில் இது தொடர்பான மேலும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிளாக்மெயில் செய்து பணிய வைக்கலாம்னு நினைக்காதீங்க! ஜாமின் ரத்து வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோர்ட் கண்டிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share