பூதாகரமாக வெடிக்கும் இருமல் மருந்து விவகாரம்: கோல்ட்ரிப் நிறுவன உரிமையாளர் அதிரடி கைது..!!
இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை ம.பி. போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் (Sresan Pharmaceuticals) நிறுவனத்தின் உரிமையாளர் ஜி. ரங்கநாதன் மத்தியப் பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு, மருந்து தொழிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தப் பேரழிவு, அரசியல் மற்றும் சமூக விவாதங்களைத் தூண்டியுள்ளது. இருமல் மற்றும் சளி பிரச்சினைகளுக்காக 'கோல்ட்ரிப்' (Coldrif) என்ற இருமல் மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்த மருந்தை பெரும்பாலான குழந்தைகளுக்கு உள்ளூர் அரசு மருத்துவரான டாக்டர் பிரவீன் சோனி பரிந்துரைத்திருந்தார். போலீஸ் விசாரணையில், மருந்தில் டயீத்திலீன் கிளைகோல் (Diethylene Glycol) என்ற நச்சு பொருள் 480 மடங்கு அதிக அளவில் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இது, 2023-இல் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இருமல் மருந்து விஷச்சம்பவத்தை நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!
இதனிடையே இருமல் மருந்து சாப்பிட்ட 5 குழந்தைகள் அண்டை மாநிலமான மராட்டியத்தின் நாக்பூரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 2 குழந்தைகள் எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 2 குழந்தைகள் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ், சென்னை அருகே காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த மருந்தை உற்பத்தி செய்தது. 73 வயது ரங்கநாதன், மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி மருந்தியல் பட்டதாரி ஆவார். 1990-இல் ஸ்ரீசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் தனியார் நிறுவனமாகத் தொடங்கி, பின்னர் தனியார் உரிமையில் மாற்றப்பட்டது. 'ப்ரோனிட்' என்ற ஊட்டச்சத்து சிரப் மூலம் அவர் தமிழ்நாட்டு மருந்துத் தொழிலில் புகழ் பெற்றார். தொழில்முன்னோடிகளுக்கு வழிகாட்டியாக இருந்த இவர், தற்போது இந்த வழக்கில் அவரது நிறுவனத்தின் தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட மீறல்கள் கண்டறியப்பட்டன. மருந்து லேபிளில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இது பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை இல்லை என்றும் போலி முகவரிகளைப் பயன்படுத்தியதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்தியப் பிரதேச அரசு, கோல்ட்ரிப் மருந்து மற்றும் ஸ்ரீசன் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் தடை செய்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, ரங்கநாதனைத் தீவிரமாக தேடி வந்தது. அவர் மூன்று நாட்கள் முன்பு தப்பி ஓடியதாக கூறப்பட்ட நிலையில், ம.பி. போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை நீதிமன்றத்தில் அவர் இன்று (அக்டோபர் 9) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்புக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??