கடத்தப்பட்ட பஞ்சாப் பாடகி உடல் கால்வாயில் மீட்பு! சோகத்தில் முடிந்த 6 நாட்கள் தேடல்! 2 பேர் கைது!
கடத்தப்பட்டு ஆறு நாட்களுக்குப் பின், பஞ்சாபி பாடகியின் உடல் லுாதியானா கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
லூதியானா: பிரபல பஞ்சாபி பாடகி யஷிந்தர் கவுர் (இந்தர் கவுர் - 29) கடத்தப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு லூதியானா கால்வாயில் அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த இந்தர் கவுர், கடந்த 13-ம் தேதி மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக காரில் சென்றபோது கடத்தப்பட்டார். அவரைத் தேடிய சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 17-ம் தேதி லூதியானா கால்வாயில் இந்தர் கவுரின் உடலும், அவரது காரும் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன. மோகாவைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் என்பவரே இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். கனடாவில் வசித்து வரும் சுக்விந்தர் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்பவர். இன்ஸ்டாகிராம் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தர் கவுருடன் அறிமுகமான அவர், நெருங்கிப் பழகி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!
இந்தர் கவுர், சுக்விந்தர் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்ததும் அவருடனான தொடர்பை துண்டித்தார். ஆனால் சுக்விந்தர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுக்விந்தர் தனது தந்தை பிரீதம் சிங் மற்றும் நண்பர் கரம்ஜித் சிங் ஆகியோருடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் இந்தர் கவுரை கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் நேபாளம் வழியாக கனடா தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் சுக்விந்தரின் தந்தை பிரீதம் சிங் மற்றும் நண்பர் கரம்ஜித் சிங் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். லூதியானா போலீஸ் துணை கமிஷனர் இந்தர் சிங் போபராய் கூறுகையில், “இன்ஸ்டாகிராமில் 1.24 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபல பாடகி இந்தர் கவுர். ‘சோனே டி வாங்’ உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் அறியப்பட்டவர்” என்றார்.
இந்த சம்பவம் பஞ்சாபில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தர் கவுரின் ரசிகர்கள் மற்றும் பஞ்சாபி இசை உலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் தவெக அமைச்சரவையில் விசிக முக்கிய புள்ளி?! கேபினட் விரிவாக்கத்தில் யார் உள்ளே? யார் வெளியே?!