சொதப்பிய ப்ளான்! கரூர் திட்டம் பலிக்காததால் அப்செட்டில் திமுக! மத்தியில் விஜய்க்கு அதிகரிக்கும் செல்வாக்கு!
த.வெ.க., தலைவர் விஜயிடம் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'நீங்கள் கவலைப்பட வேண்டாம்; காங்கிரஸ் துணை நிற்கும்' என, நம்பிக்கை அளித்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்க்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொலைபேசியில் ஆறுதல் கூறியுள்ளார்.
“இந்த இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் கட்சியும் நானும் உங்களுடன் இருக்கிறோம்; கவலைப்பட வேண்டாம்” என்று ராகுல் நம்பிக்கையளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உரையாடல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு, கரூர் சென்ற த.வெ.க. தலைவர் விஜய், அங்கு நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் விஜய்க்கும், த.வெ.க.வுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரம் குறித்து அவதூறு?! 3 பேர் கைது! யாரை காப்பாற்ற? எதை மறைக்க? நயினார் கோவம்!
இந்தச் சம்பவத்திற்கு, “காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இல்லாததே காரணம்” என்று த.வெ.க.வினர் குற்றம் சாட்ட, “விஜயும், அவரது கட்சியினரும் விதிகளை மதிக்காமல் நடந்ததே காரணம்” என்று ஆளும் தி.மு.க. பதிலடி கொடுத்து வருகிறது.
விஜய், தனது அரசியல் பயணத்தில் தி.மு.க.வை முதன்மை எதிரியாக முன்னிறுத்தி, தமிழக அரசையும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, ஸ்டாலின் குடும்பத்தை “ஊழலில் ஊறித்திளைத்த குடும்பம்” என்று கூறியதோடு,
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, “வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் முதலீடா?” என்று கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்தார். இது தி.மு.க.வினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பதிலுக்கு, தி.மு.க.வினர் விஜயை கடுமையான சொற்களால் விமர்சித்து, சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆனால், தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், விஜயை நட்பு பாராட்டி அணுகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர், குறிப்பாக ராகுலுக்கு நெருக்கமான பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் போன்றவர்கள், “த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும் ஆட்சியைப் பிடிக்க உதவும்” என்று கருதுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் விஜயை விமர்சிக்காமல், நட்பு பாராட்டி வருகின்றனர்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் ராகுலைத் தொடர்பு கொண்டு, “விஜய் தி.மு.க.வையும், ஸ்டாலின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார். இது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கூட்டணியின் ஓட்டு வங்கி பாதிக்கப்படலாம். எனவே, விஜயிடம் பேசி, தி.மு.க.வுக்கு எதிராக பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், ராகுல் இந்தக் கோரிக்கைகளை பேசாமல், விஜயிடம் ஆறுதலாகவும், நட்பாகவும் உரையாடியுள்ளார். கரூர் சம்பவத்தில் தி.மு.க.வினரும், காவல்துறையும் நடந்துகொண்ட விதம் குறித்து விஜய் ராகுலிடம் எடுத்துரைத்ததாகவும், இது தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அவசியம் என்பதால், தி.மு.க.வினர் இதுகுறித்து மவுனமாக இருக்கின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், ராகுல் காந்தியும் விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியதைத் தொடர்ந்து, விஜய் தனது அரசியல் பயணத்தை மேலும் வலுவாகத் தொடர முடிவு செய்துள்ளார். “கரூர் சம்பவம் நம் அரசியல் பயணத்தை பலவீனப்படுத்தாது; இன்னும் தைரியத்துடன் முன்னேறுவோம்” என்று அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
விஜயின் இந்த உறுதியான நிலைப்பாடு, தமிழக அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்களை உருவாக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் அமித் ஷா த.வெ.க.வை பா.ஜ. கூட்டணிக்கு அழைத்த நிலையில், மறுபுறம் காங்கிரஸின் நட்பு அணுகுமுறை, விஜயின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூரை தொடர்ந்து நாமக்கல்! புஸ்ஸி ஆனந்த் முதல் மதியழகன் வரை! தவெக நிர்வாகிகள் வழக்குப்பதிவு!