×
 

மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷம்! 'நான் இன்ஸ்பெக்டர்' என மிரட்டிய போலீஸ் அதிகாரி கைது!

வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன், 47, உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, வேளச்சேரியைச் சேர்ந்த 30 வயது பெண் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரவு, வேளச்சேரி 100 அடி சாலையில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த இருவரில், பின்னால் அமர்ந்திருந்த நபர் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக சத்தம் போட்டார். அவரது அலறலைக் கேட்டு அருகில் இருந்த கணவர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து, ஸ்கூட்டரில் இருந்த இருவரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த நபர், "நான் இன்ஸ்பெக்டர்... என்னிடமே தகராறு செய்கிறீர்களா?" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!

இந்த சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடையவர் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பது தெரியவந்தது. அவர் முன்னதாக செம்மஞ்சேரி மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்களில் பணியாற்றியதுடன், பின்னர் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டிருந்தார்.

சம்பவத்தன்று இரவு, மணிமாறன் தனது மைத்துனரான பெயிண்டர் மணி என்பவருடன் மது அருந்தியிருந்ததாகவும், அதன்பின்னர் இருவரும் வீட்டுக்கு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அவரது மைத்துனர் மணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறையிலும், பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலீசை வெட்டிய A+ ரவுடி! தப்பியவனை சுட்டுப்பிடித்த போலீஸ்! சென்னை குன்றத்தூரில் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share