வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி! சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!
துமகூரு நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை ஒரு எலி திருடி சென்று பதுக்கியது. இந்த குட்டு கண்காணிப்பு கேமராவால் அம்பலமானது.
கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திடீரென மாயமான நிலையில், அதை திருடிச் சென்றது மனிதர்கள் அல்ல, ஒரு எலி என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
துமகூரு நகரின் கால் டெக்ஸ் சர்க்கிள் பகுதியில் செயல்பட்டு வரும் விஸ்வாஷ் ஜுவல்லரியில் வழக்கம்போல் காலை நேரத்தில் கடை திறக்கப்பட்டபோது, காட்சிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும், 2 தங்க சங்கிலிகளும் காணாமல் போயிருந்தன. கடையின் கதவுகள் உடைக்கப்படவில்லை. சுவரிலும் எந்தவித உடைப்பு அல்லது திருட்டுக்கான அடையாளங்களும் இல்லாததால், கடை உரிமையாளர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.
முதலில் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், போலீசில் புகார் அளிப்பதற்கு முன் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையும் படிங்க: “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!
இரவு நேரத்தில் கடைக்குள் சுற்றித் திரிந்த ஒரு எலி, காட்சிப் பெட்டியில் இருந்த தங்க சங்கிலிகள் மற்றும் வைர மோதிரங்களை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது.
இதையடுத்து, எலி நகைகளை எங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என்று கடை முழுவதும் தேடுதல் நடத்தப்பட்டது. மர அலமாரிகள் மற்றும் அதன் பின்புற பகுதிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டபோது, ஒரு துளையின் உள்ளே காணாமல் போன அனைத்து நகைகளும் பாதுகாப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளுடன் இணைக்கப்பட்டிருந்த விலை ஸ்டிக்கர்கள் மட்டும் எலியால் கடித்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. சுமார் 13 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதால் கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இருப்பினும், நகைகளை எடுத்துச் சென்ற அந்த எலி இன்னும் பிடிபடவில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவம் அரிதானது என்பதால், இணையத்தில் இந்த "கில்லாடி எலி" தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசியாவில் போர் பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் பற்றாக்குறை? மோடி அவசர ஆலோசனை!