வளர்ப்பு மகனின் கண்களை பிடுங்கிய கொடூரன்!! 12வயது சிறுவனை இரக்கமில்லாமல் கொன்ற தந்தை!
வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் நேற்று நடந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 12 வயது சிறுவன் அல்தமாஷ் (7-ம் வகுப்பு) பள்ளியில் இருந்து வீடு திரும்புகையில் மாயமானார்.
மாலை அவரது வளர்ப்புத் தந்தை வஜித், சிறுவனின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து "உன் தம்பியை கொலை செய்து விட்டேன். உடலை காட்டுப் பகுதியில் எடுத்துச் செல்" என்று கூறினார். பதறிய குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சாலையோர புதரில் சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தான்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. வஜித் பள்ளிக்கு சென்று சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பிரவுசிங் சென்டரில் பாலியல் தொல்லை..! போக்சோவில் உரிமையாளரை கைது செய்த போலீஸ்..!
பின்னர் கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கியுள்ளார். சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் ரத்த வெள்ளம் பரவியிருந்தது. வஜித் தலைமறைவாக உள்ளதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி மிகவும் வேதனை அளிக்கிறது. 2020-ம் ஆண்டு கணவரை இழந்த இளம்பெண் வஜித்தை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே மூன்று மகன்கள் இருந்தனர்.
மகன்களுடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விடுதியில் தங்கியிருந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்று வஜித் வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. "உன் மகன்களை கொலை செய்து விடுவேன்" என்று வஜித் மிரட்டியதாக தெரிகிறது.
சிறுவனின் தாய் போலீசாரிடம் அளித்த புகாரில், முன்பு கணவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், அவர் மீண்டும் துன்புறுத்த மாட்டேன் என்று உறுதியளித்ததால் புகாரை வாபஸ் பெற்றதாகவும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் சண்டை ஏற்பட்டபோது கணவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னதால் கோபமடைந்த வஜித் தனது மகனை கொலை செய்துள்ளார் என்று தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளது. போலீசார் வஜித்தை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!