பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்! என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!
குஜராத்தில், தன் மனைவி மற்றும் மாமியாரின் கொடுமை களை தாங்க முடியாத நபர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக்கோரி மனு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் குடும்ப பிரச்னையால் மனவேதனை அடைந்ததாகக் கூறும் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த கிரித் படேல் என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். அவர் தனது நான்காவது மனைவியான மனிஷா சவுகானுடன் பல ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திருமண வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே சிறிய விஷயங்களுக்குக் கூட சந்தேகம் கொண்டு மனைவி அடிக்கடி சண்டையிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குடும்ப அமைதிக்காக பல ஆண்டுகளாக அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக கூறும் கிரித் படேல், தற்போது நிலைமை கட்டுக்கடங்காத அளவுக்கு மோசமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சூரத் மாவட்ட கலெக்டரிடம் அவர் அளித்துள்ள மனுவில், தனது மனைவி, மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வருவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!
இந்த சூழ்நிலையில் தன்னால் இனி வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது மனுவின் மீது மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான முடிவு எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதே மனுவில் மேலும் சில முக்கிய குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். தனது முதல் மனைவிக்கு பிறந்த மகனை கொலை செய்ய தனது தற்போதைய மனைவி திட்டமிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தான் ஒரு ஆண் என்பதாலேயே தனது புகார்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
இந்த மனு தற்போது அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குடும்ப பிரச்னைகள் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்து மீண்டும் ஒரு முறை சமூகத்தில் விவாதம் உருவாகியுள்ளதோடு, இந்த விவகாரம் சூரத் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!