திமுகவில் இணைந்த வைத்திலிங்கத்துக்கு செக்!! ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கு!! மறுவிசாரணை நடத்த உத்தரவு!
திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கு, முந்தைய ஆட்சியில் முடித்து வைக்கப்பட்டது. அதை மறுவிசாரணை செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய முடிவு ஒன்றை தமிழக அரசு எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ரூ.27.9 கோடி ஊழல் வழக்கை மறுவிசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு காலத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு, பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கோரிய ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து, அப்போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் 19-ம் தேதி, வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் “போதிய ஆதாரங்கள் இல்லை” எனக் கூறி வழக்கை கைவிடுவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அப்போதே பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதையும் படிங்க: தவெக தாவியவர்கள் பதவி இல்லாமல் தவிப்பு! விஜய் கொடுத்த ப்ராமிஸ்! இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கு சம்பவம்!
ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த பழைய வழக்கை மீண்டும் திறந்து விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முத்தம்மாள் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விரிவாக ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மறுவிசாரணை உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மீண்டும் விசாரணைக்கு வருவது, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை இப்போது முழு விவரங்களையும் சேகரித்து, ஆதாரங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளது.
இந்த வழக்கின் மீள் விசாரணை எப்படி முன்னெடுக்கப்படும், என்னென்ன புதிய ஆதாரங்கள் சேர்க்கப்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. தமிழகத்தில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயை மிஞ்சும் மூவர் அணி! தவெக பவர் சென்டர்கள்?! உளவுத்துறை அதிகாரிகள் அப்செட்!