கோயிலுக்கு போலாம் என கூப்பிட்ட காதல் கணவன்... நம்பிச் சென்ற மனைவிக்கு நடுக்காட்டில் நேர்ந்த பயங்கரம்...!
தெலங்கானாவில் மனைவியை ஏமாற்றி கோவிலுக்கு செல்வதாக கூறி காட்டிற்கு அழைத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதல் கணவனால் பரபரப்பு
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், லிங்கால் மண்டலம் ராயவரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் (32) என்பவர் மஹபூப் நகர் மாவட்டம், தேவரகட்டு மண்டலம் கோடூரைச் சேர்ந்த ஸ்ராவணிக்கு (27) ராங் கால் மூலம் தொலைபேசியில் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தொலைபேசியில் அடிக்கடி பேசிகொண்டபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது . பின்னர் இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ஸ்ராவணியின் நடத்தையில் ஸ்ரீசைலம் சந்தேகப்பட்டு வந்தார்.
திருமணமான சில காலத்திற்குப் பிறகு, ஸ்ராவணி தனது அக்காவின் கணவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, ஸ்ராவணி தனது அக்காவின் கணவருடன் சென்றுவிட்டார். ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் கணவனிடம் திரும்பி வந்தபோது, ஸ்ரீசைலம் ஸ்ராவனியை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீசைலம் மது பழக்கத்துக்கு ஆளாகி வீட்டை கவனிக்காமல் தினமும் மது அருந்தி வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டார்.ஒருபுறம் ஸ்ராவணி அடிக்கடி தொலைபேசியில் பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் கவனித்த ஸ்ரீசைலம் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். அவரது நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு பலமுறை கூறியும் ஸ்ராவனி கேட்காததால், ஸ்ரீசைலம் அடிக்கடி மது அருந்தி தகராறு செய்தார். இதனால், நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ராவணி கணவனுடன் தொல்லை தாங்க முடியாமல் தனது பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: அகமதாபாத்: சீனியரை குத்திக்கொன்ற ஜூனியர்.. தனியார் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!!
அதன்பின், மஹபூப் நகரில் உள்ள அம்பேத்கர் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஸ்ரீசைலம் ஐதராபாத்தில் உள்ள யூசுப் கூடாவில் உள்ள விடுதியில் தங்கி, தினக்கூலியாக சென்று பணி புரிந்து வந்தார். இருப்பினும் மனைவி மீது பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்துக்கொண்ட ஸ்ரீசைலம், அவளை கொலை செய்ய முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி, இந்த மாதம் 21ஆம் தேதி ஐதராபாத்திலிருந்து மஹபூப் நகருக்கு வந்தார்.
முந்தைய நாள் இரவு மனைவிக்கு போன் செய்து, தான் மாறிவிட்டதாகவும், இனி சண்டையிட மாட்டேன் என்றும், காலையில் சோமசிலாவிற்கு செல்வோம் என்றும் கூறினார். இதனை நம்பிய ஸ்ராவணி, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்து வந்த ஸ்ரீசைலத்துடன் சோமசிலாவிற்கு சென்றார்.
கொத்தபள்ளி மண்டலத்தில் உள்ள சாதாபூருக்கு வந்தபின், வண்டியை நிறுத்திவிட்டு சீதாப்பழங்கள் இருக்கின்றன என்று கூறி, மனைவியை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றார். உள்ள சென்றதற்குப் பின் அங்கு, ஸ்ராவனி கழுத்தில் துப்பட்டாவை சுற்றி, கழுத்தை நெறித்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பலமுறை குத்தினார். மனைவி இறந்துவிட்டதை உறுதி செய்த பின்னர் தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பியோடினார்.
தனது மகள் காணவில்லை என்று ஸ்ராவணியின் தந்தை சந்திரய்யா மஹபூப் நகரில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, காணாமல் போன வழக்காக பதிவு செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு கடைசியாக ஸ்ரீசைலத்துடன் சென்றதை அறிந்து அவரை பிடித்து விசாரித்தபோது ஸ்ராவனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் ஸ்ரீசைலத்தை அழைத்து சென்று கொலை செய்த இடத்தையும் காட்டியதும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீசைலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பரபரப்பு... இளைஞர் கார் ஏற்றி கொலை! காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வீட்டார் வெறிச்செயல்…