என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!
சந்தோஷை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஐதராபாத்: தெலங்கானாவில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த தங்கையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அவரது கணவர், ஜாமீனில் வெளியே வந்த நிலையில், மனைவியின் அண்ணன் உள்ளிட்டோர் அவரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கூறப்படும் அண்ணன் போலீசில் சரணடைந்துள்ளார்.
மாதாபூரைச் சேர்ந்த வைஷ்ணவி, யூடியூபரான ஹரிபாபுவை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து தங்களது வாழ்க்கை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக வைஷ்ணவி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரிபாபு கத்தியால் தாக்கியதில் வைஷ்ணவி உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது வைஷ்ணவி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பைக்கில் வந்தவரை வழிமறித்து கத்தி முனையில் பணம் பறிப்பு! சென்னையில் பரபரப்பு! திருட்டு கும்பல் சிக்கியது எப்படி?
இந்த வழக்கில் சிறையில் இருந்த ஹரிபாபு பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன்பிறகு நிஜாமாபாத் ராஜ ராஜேந்திரா சந்திப்பு பகுதியில் மக்காச்சோளம் விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, வைஷ்ணவியின் குடும்பத்தினர் ஹரிபாபு மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்ற ஹரிபாபுவை காரில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை பட்டாக்கத்தியால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வைஷ்ணவியின் அண்ணன் சந்தோஷ் உள்ளிட்டோரை தேடி வந்தனர். இதற்கிடையே சந்தோஷ் சமூக வலைதளத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதில், தனது தங்கையை கொலை செய்தவரை தானும் கொன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாகவும், கடுமையான தண்டனையில் இருந்து தன்னை காப்பாற்றுமாறும் அவர் வீடியோவில் வேண்டுகோள் விடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்குப் பிறகு பயமாக இருப்பதாகவும், காவல் நிலையத்தில் சரணடையப் போவதாகவும் கூறிய அவர், பின்னர் போலீசில் சரணடைந்தார்.
சந்தோஷை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒரு குடும்பத் தகராறு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துள்ள சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறார் என சொல்லி தப்ப முடியாது! கொலை வழக்குகளில் சிறுவர்களுக்கு இனி என்ன தண்டனை? கோர்ட் முக்கிய முடிவு!