நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி
திருநெல்வேலி, நெல்லை மாநகரம், பேட்டை பகுதியில் நேற்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகரம் பேட்டை பகுதியில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டை சத்யா நகர், முத்துராமலிங்க நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சிவா (26) மற்றும் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சுந்தரசேகர் மகன் காளிதாஸ் (26) ஆகிய இருவரும் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், பொதுஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்
அதன்படி, சிவா மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் இருவர் மீதும் இதே சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேட்டை பகுதியைச் சேர்ந்த சபூர்அலி மகன் சித்தர்பாதுஷா (23) மற்றும் துரைராஜ் மகன் மகாராஜன் (24) ஆகிய இருவரும் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி சித்தர்பாதுஷா மற்றும் மகாராஜனும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!