×
 

தங்கக்கட்டி பிரியாணி ஓனர் தீக்குளிப்பு! வேகமாக உச்சிக்கு போனவர்.. கள்ளக்காதலில் வீழ்ந்த கதை!

தூத்துக்குடியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர், காவல் நிலையம் முன்பு கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த ஜெகன் என்ற சுவிசேஷராஜ் (42), 'ஸ்ரீ தங்கக்கட்டி' என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி பிரபலமானவர். தூத்துக்குடி அண்ணாநகரில் தொடங்கிய இவரது பிரியாணி கடை, சுவை மற்றும் தரத்தால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 2024 பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கட்சிகளின் பூத்துகளுக்கு பிரியாணி வழங்கி, இவர் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் டூவிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மற்றும் ஸ்பிக் நகரில் இரண்டு இடங்களில் கூடுதல் கிளைகளைத் தொடங்கினார். வியாபாரம் செழித்து வளர்ந்ததால், கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஜெகனுக்கு மனைவி முத்துகனி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். வியாபார வெற்றியால் பணம் கையில் புரளத் தொடங்கியபோது, மனைவியின் தங்கையுடன் ஜெகனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் கடும் பிரச்னைகள் எழுந்தன. 

இதையும் படிங்க: BREAKING! வந்தாச்சு தீபாவளி போட்டாச்சு போனஸ்! தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்! முதல்வர் அறிவிப்பு!

இந்த தகராறு மனைவி முத்துகனி மற்றும் பிள்ளைகள் சென்னைக்கு பிரிந்து செல்லும் அளவுக்கு மோசமானது. மனைவி பிரிந்த பிறகும், ஜெகன் தனது மனைவியின் தங்கையுடன் தொடர்பைத் தொடர்ந்தார். இதனால், மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து மற்றும் அவரது உறவினர்கள் ஜெகன் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதற்கிடையில், ஜெகன் தனது பிரியாணி கடைகளை நிர்வகிப்பதில் அக்கறை காட்டாமல், அதிக நேரத்தை மனைவியின் தங்கையுடன் செலவழித்தார். இதே சமயத்தில், தூத்துக்குடியில் புதிய பிரியாணி கடைகள் தொடங்கப்பட்டு, கடும் போட்டி நிலவியது.

 இதனால், ஜெகனின் வியாபாரம் படிப்படியாக தோல்வியடையத் தொடங்கியது. தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டத்தால், அவர் தனது மூன்று கிளைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில், தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் ஒரே ஒரு பிரியாணி கடையை மட்டும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து மற்றும் அவரது உறவினர்கள் ஜெகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெகன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு ஜெகன் மீண்டும் முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு, தனது பைக் மற்றும் செல்போன் உடைக்கப்பட்டதாகவும், இதற்கு நஷ்ட ஈடு வேண்டும் என்றும், மற்றொரு புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரினார். ஆனால், ஜெகன் மது போதையில் இருப்பதைக் கண்ட காவலர்கள், "காலையில் வாருங்கள், பேசிக்கொள்ளலாம்" எனக் கூறினர்.

இந்த பதிலால் கோபமடைந்த ஜெகன், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "என் புகார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுக்கிறீர்களா?" எனக் கத்தியபடி, காவல் நிலையத்தின் முன்பு உள்ள சாலையில் நின்றார். திடீரென, தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய, ஜெகன் காவல் நிலையத்திற்குள் ஓடினார். 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை ஜெகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடை உரிமையாளரின் இந்த துயர முடிவு, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முத்தையாபுரம் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயை கைது பண்ணட்டும்?! அப்புறம் இருக்கு! எடப்பாடியின் பக்கா ஸ்கெட்ச்! தவெக - அதிமுக கைகோர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share