கொடுத்த கடனை திரும்பக் கேட்ட பெண் பேராசிரியருக்கு கொடூர முடிவு... பாலத்துக்கு அடியில் சடலம்; தம்பதி கைது!
அங்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அது சுகன்யாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொடுத்த கடனை வசூலிக்கச் சென்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், புகார் அளிக்க வந்த பெண்ணின் குடும்பத்தினரை அலைக்கழித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துறையூர் அருகே கீரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. கணவரைப் பிரிந்து வசித்து வந்த இவர், காளிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தனக்கு தெரிந்தவர்களுக்கு பணம் கொடுத்து வந்ததாகவும், சீட்டு நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 20-ம் தேதி, கொடுத்த பணத்தை வசூலிக்க சுகன்யா சமத்துவபுரம் பகுதிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: அமைச்சர்களை எதிர்த்து விவசாயிகள் கோஷம்! பாதியில் முடிந்த பேச்சுவார்த்தை!
இதற்கிடையே, கரட்டாம்பட்டி அருகே பாலத்தின் கீழ் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அது சுகன்யாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுகன்யா கடன் வசூலிக்க சென்ற வீட்டில் அவருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு சடலம் பாலத்துக்கு அடியில் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சுமதி மற்றும் அவரது கணவர் துரைராஜ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் போலீசாரின் செயல்பாடு குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது. சுகன்யா காணாமல் போனது தொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளிக்க சென்றபோது, காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதையடுத்து துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடன் வசூலிக்க சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவமும், புகார் அளிப்பதில் ஏற்பட்டதாக கூறப்படும் தாமதமும் துறையூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் சினிமாவை மிஞ்சிய குட்கா வேட்டை! சிக்கிய கடத்தல்காரர்கள் 2 பேருக்கு கை முறிவு!