8-ம் வகுப்பு மாணவி பலி?! உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு! 2 பேர் சஸ்பெண்ட்!
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹர்தோய்: உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்த 8-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவியின் வகுப்புத் தோழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹர்தோய் மாவட்டத்தின் பர்கானி வளர்ச்சி வட்டாரத்தில் உள்ள பள்ளியில் ஷாமா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20-ம் தேதி தேர்வு எழுதுவதற்காக மாணவி பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கும் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஷாமா தனது வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்ததாக மாணவியின் தந்தை போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், பிரச்சனை குறித்து முழுமையாக விசாரிக்காமல் ஆசிரியர் மாணவியை கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!
ஆசிரியர் தாக்கியதில் மாணவி பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பரூக்காபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்பை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்ஷய் சிங் யாதவ், வகுப்பு ஆசிரியர் ராஜேந்திர கங்வார் மற்றும் மாணவியின் வகுப்புத் தோழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவி உயிரிழந்ததற்கான முழுமையான காரணம் மற்றும் பள்ளியில் நடந்த சம்பவத்தின் உண்மை நிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை உரிய முறையில் விசாரித்து, ஆசிரியர்கள் பொறுப்புடன் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 8-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கான்பூரை உலுக்கிய விமான விபத்து! பயிற்சி விமானம் வயலில் விழுந்ததில் 2 பைலட்டுகள் பலி!