விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பயங்கரம்.. பட்டா கத்தியுடன் இளைஞர்களை விரட்டி வெட்டிய திமுக கவுன்சிலர் கணவர்!
இந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் மகன் விக்னேஷ் என்ற டெல்லிபாபு காயமடைந்ததார்.
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில், திமுக வார்டு உறுப்பினரின் கணவர் பட்டா கத்தியுடன் இளைஞர்களை விரட்டிச் சென்று வெட்டியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பென்னாத்தூர் அருகே உள்ள கண்ணாடிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் திமுக வார்டு உறுப்பினராக உள்ளதாக கூறப்படுகிறது. இவரது கணவர் குமார். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அப்பகுதியில் ஊர்வலம் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது குமாரின் வீட்டின் அருகே இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த குமார், பட்டா கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்து இளைஞர்களை விரட்டியதாகவும், அவர்களில் சிலரை கத்தியால் வெட்ட முயன்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் மகன் விக்னேஷ் என்ற டெல்லிபாபு காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!
காயமடைந்த விக்னேஷ், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, பட்டா கத்தியுடன் ஒருவர் இளைஞர்களை துரத்திச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பட்டா கத்தியுடன் பொதுமக்களை விரட்டியதாக கூறப்படும் சம்பவத்தில், போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசாரின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் பட்சத்தில் மட்டுமே குற்றச்சாட்டுகளின் முழு விவரம் தெளிவாகும்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!