இயன்முறை மருத்துவம்... நிரந்தர பணியிடங்கள் தேவை... வேல்முருகன் வலியுறுத்தல்.!!
இயன்முறை மருத்துவம் குறித்து வேல்முருகன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் அன்று இயன்முறை மருத்துவர்களின் வாழ்வாதாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் இயக்கத்தை மீட்டெடுத்து அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பும் பணியில் இயன்முறை மருத்துவர்கள் ஆற்றும் பங்கு அளப்பரியது என்று அவர் குறிப்பிட்டார். பக்கவாதம், எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகள், விபத்துக்குப் பிந்தைய மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் மருந்துகளுக்கு அப்பாற்பட்ட முக்கியமான சிகிச்சைத் துணையாக இயன்முறை மருத்துவம் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆயிரக்கணக்கான இயன்முறை மருத்துவர்கள் மக்களின் உடல்நலத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பது வேதனைக்குரியது என்று வேல்முருகன் வருத்தம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரம் இயன்முறை மருத்துவர்கள் இருந்தும், அரசு மருத்துவமனைகளில் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். தனியார் துறையிலும் பல இடங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே இருப்பது அவர்களின் உழைப்பையும் தகுதியையும் அவமதிக்கும் நிலையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவத் துறையின் ஓர் அங்கமாக செயல்படும் இவர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பான பணிச்சூழலும், நியாயமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். இயன்முறை மருத்துவர்களின் சேவையை அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மறுவாழ்வு சிகிச்சையை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: வெற்று வாக்குறுதிகள்... நடுரோட்டில் விவசாயிகள்..! பிரச்சனைகளை அடுக்கிய வேல்முருகன்..!
எனவே தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கேற்ப இயன்முறை மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கோரினார். தனியார் துறையில் பணியாற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கும் குறைந்தபட்ச நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இளைஞர்களை புறக்கணிக்கும் மத்திய அரசு..! துணை போகிறதா தமிழக அரசு.? வேல்முருகன் கேள்வி.!!