உதயநிதி இல்லத்துக்கு அருகிலேயே புது வீட்டிற்கு மாறும் முதல்வர் விஜய்?! ரெடியாகும் பிரமாண்ட பங்களா?!
கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், அதன்பிறகு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வருகிறார்.
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தங்குவதற்காக, சென்னையில் உள்ள அரசு பங்களாவை பிரமாண்டமாகச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள ‘எழில் இல்லம்’ புதுப்பிக்கப்பட்டு, ‘வெற்றி இல்லம்’ எனப் பெயர் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற த.வெ.க. தலைவர் விஜய், அதன்பிறகு கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வருகிறார்.
முதல்வரின் பயணத்தின்போது, சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலான சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரஜினி ஆதரவு இல்லாமல் விஜயை எதிர்க்க முடியாது! அரசியலில் தனுஷுக்கு பாஜக தலைவர்கள் அட்வைஸ்?
அலுவல் நேரம் முடிந்த பிறகு, பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிலும் விஜய் சிறிது நேரம் தங்குவதாகத் தெரிகிறது. அந்த வீட்டை முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்தி வருவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் வகையில் அரசு பங்களாவுக்கு மாற அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பசுமை வழிச்சாலையில் உள்ள எழில் இல்லத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டின் வளாகத்தில் உடற்பயிற்சிக் கூடம், பேட்மிண்டன் மைதானம், காவலர்கள் தங்குவதற்கான இடம், நடைபாதை, புல்வெளிகள் மற்றும் சிறிய கூட்டரங்கம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அரசு பங்களாக்களைச் சீரமைக்கும் பணிகளைப் பொதுப்பணித் துறை மேற்கொள்வது வழக்கம். ஆனால், விஜய் தங்கவுள்ள இல்லத்தின் பணிகள் தனியார் வாயிலாக மேற்கொள்ளப்படுவதாகவும், இதுவரை இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த மாதம் விஜய் புதிய இல்லத்துக்குக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வசிக்கும் குறிஞ்சி இல்லத்துக்கு அருகில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் அமைச்சர்களின் அரசு பங்களாக்களும் உள்ளன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த தியாகராஜன் இந்த இல்லத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அப்டேட் கேட்கும் முதல்வர் விஜய்! களமிறங்கிய அமைச்சர் ஆனந்த்! தி.நகரில் அதிரடி ஆய்வு!