×
 

#BREAKING: விஜய் தலைமையேற்ற எம்.ஜி.ஆர். விசுவாசி... தவெக.காரரான செங்கோட்டையன்...!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாளம் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக வெற்றி கழகத்திற்கு அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் இதனால் விஜய் அரசியலில் நிலைப்பது கேள்விக்குறிதான் என்றும் சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.

கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார்.

விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு செங்கோட்டையன் வருகை தந்திருந்தார். செங்கோட்டையன் வருவதற்கு முன்னதாகவே விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். செங்கோட்டையன் விஜயுடன் சந்திப்பு நிகழ்த்திய நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் மற்றும் பவுன்சர்கள் புடைசூழ வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தார். செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் விஜய்க்கு கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயின் தேர்தல் திட்டமிடலை செங்கோட்டையன் கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர். 

இதையும் படிங்க: அரசியலில் தலைகீழ் திருப்பம்... TVK- வில் செங்கோட்டையன்? பனையூர் வந்த தவெக தலைவர் விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share