போலீஸ்னா என்ன இதுவா? லேடி ஏட்டுக்கு அரிவாள் வெட்டு.. கம்பத்தில் பரபரப்பு..!
காவல்துறையின் சீருடை அணிந்து பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டை அடித்து கீழே தள்ளி, கண் அருகே அரிவாள் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.
தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (வயது 43). கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். அந்த காவல் நிலையத்தில் பதிவாகும் வழக்குகள் தொடர்பாக மாவட்ட நீதிமன்ற வழக்கு பணியில் ஈடுபடும் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று விட்டு, கம்பம் வடக்கு காவல் நிலையம் வந்துள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்காக சீருடை அணிந்து கொண்டு நிலையில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள அரசமரம் பூக்கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 55 வயதுடைய நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வைத்து வெற்ற முயன்றார்.
அப்போது அம்பிகா தடுக்க முயன்ற உள்ளார். இதில் அம்பிகாவின் இடது கண்ணிற்கு கீழ் பகுதியில் வெட்டு விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதிக்கு கம்பம் தெற்கு சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா காயம் பட்ட காவலர் அம்பிகாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்னர் அரிவாளால் வெட்டிய வரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர் கூடலூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பது தெரிந்தது.
இதையும் படிங்க: இப்படியுமா சாவு வரும்..? பைக்கில் மறைந்திருந்த விஷப்பாம்பு.. பாம்பு கடித்து இளைஞர் பலி..!
குபேந்திரனுக்கும், அம்பிகா குடும்பத்தினருக்கும் ஏற்கனவே நில பிரச்சனை இருந்துள்ளது. நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அம்பிகாவை அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என குபேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் அறிந்த உத்தமபாளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பிகாவிடம் விசாரித்தார். பின்னர் மருத்துவரிடமும் விசாரித்தார். அப்போது அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அம்பிகாவை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கம்பத்தில் பரபரப்பாக காணப்படும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசமரம் பகுதியில் பெண் தலைமை காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி பகுதியில் காவலர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது பணியில் இருந்த பெண் தலைமை காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் மீண்டும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்டுல இவ்ளோ பணமா? ஏடிஎம் கார்டை அபேஸ் செய்த திருடன்.. நகைக்கடையில் ஜாலி பர்சேஸ்..!