காசாவில் ஏவுகணை தாக்குதலில் பலியான 20 குழந்தைகள்!! டெக்னிக்கல் எரர் என சமாளிக்கும் இஸ்ரேல்!!
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுடன் தீவிரமடைந்தது. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் தொடங்கிய இராணுவ நடவடிக்கையால் தற்போது வரை 60,200 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது, இதில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதே குரூரமான உண்மை..
காசாவில் உள்கட்டமைப்பு சீரழிந்து, 90% வீடுகள் சேதமடைந்தன. மக்கள் பலமுறை இடம்பெயர்ந்தனர், உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்தது. 96% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர், 34 பேர் பட்டினியால் இறந்தனர்.
இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸு.. இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்.. புரட்சிகரப்படை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
மருத்துவமனைகளில் 17 மட்டுமே பகுதியளவு இயங்குகின்றன, மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அவசர சிகிச்சைகள் தடைபட்டன. இஸ்ரேலின் முற்றுகை, உதவி பொருட்களை தடுத்து, பட்டினி நிலையை உருவாக்கியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
காசாவில் உணவு விநியோக இடங்களில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல்கள் பொதுமக்களை பாதித்தன. மே 26 முதல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறவாரிய (GHF) உதவி மையங்களில் 789 பேர் கொல்லப்பட்டனர், இதில் 615 பேரின் மரணம் GHF இடங்களுக்கு அருகில் நிகழ்ந்தது.
ஜூன் 17 அன்று, கான் யூனிஸில் உணவு தேடிய 70 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் மக்களிடையே மறைந்திருப்பதாகவும், எச்சரிக்கை வீச்சுகள் மூலம் பொதுமக்களை விலக்குவதாகவும் கூறியது, ஆனால் UN மற்றும் மருத்துவமனை அறிக்கைகள் இத்தாக்குதல்கள் நேரடியாக பொதுமக்களை இலக்கு வைத்ததாகக் குறிப்பிடுகின்றன.
இந்த நிலையில் நேற்று நுசைரத் அகதி முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் ட்ரோன் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்களும் அடங்குவர்.
இந்தத் தாக்குதல், எரிபொருள் பற்றாக்குறையால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய நிலையில், மக்கள் தண்ணீர் பெற கூடியிருந்தபோது நிகழ்ந்தது. அல்-அவ்டா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட உடல்கள், குழந்தைகளின் மரணத்தை உறுதிப்படுத்தின
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF), இத்தாக்குதல் இஸ்லாமிக் ஜிஹாத் "பயங்கரவாதியை" இலக்காகக் கொண்டதாகவும், ஆனால் "தொழில்நுட்ப பிழை" காரணமாக ஏவுகணை இலக்கை தவறவிட்டு, பொதுமக்கள் மீது விழுந்ததாகவும் கூறியது. இந்த சம்பவம் விசாரணையில் உள்ளதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்ப்பதாகவும் IDF தெரிவித்தது.
ஆனால், UN மற்றும் அல் ஜசீரா அறிக்கைகள், இஸ்ரேல் மக்களை நேரடியாக இலக்கு வைத்ததாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் பலமுறை நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: ஆட்டம் காட்டும் 'FAKE ID' பிரச்சனை.. இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து! ஈரான் வார்னிங்!