அமெரிக்காவில் கடும் பனிப்புயல்..!! விமானத்தில் தீ விபத்து..!! 7 பேர் பரிதாப பலி..!!
அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் பனிப்புயலால் ஏற்பட்ட கடும் வானிலை நிலையில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7:45 மணியளவில் (உள்ளூர் நேரம்) பாங்கர் இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் (Bangor International Airport) இருந்து டேக் ஆஃப் செய்த சில வினாடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
பாம்பார்டியர் சேலெஞ்சர் 600 (Bombardier Challenger 600) என்ற தனியார் பிசினஸ் ஜெட் விமானத்தில் மொத்தம் 8 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளுக்குள் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக (inverted) கவிழ்ந்து விழுந்தது. இதனால் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த கொடூர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஒரு குழு உறுப்பினர் (க்ரூ மெம்பர்) மட்டும் தீவிர காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: “கனடா ஒரு நுழைவுவாயில் அல்ல!” சீனப் பொருட்களுக்கு தடை போட துடிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!!
விபத்து நடந்தபோது கடுமையான பனிப்புயல் (severe winter storm) வீசிக்கொண்டிருந்தது. பனி பெய்து கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் டீ-ஐசிங் (de-icing) மற்றும் பனி அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இருப்பினும், விமானம் டேக் ஆஃப் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலைய இயக்குநர் ஜோஸ் சாவெட்ரா (Jose Saavedra) கூறுகையில், விபத்து நேரத்தில் பனி வீச்சு தொடங்கியிருந்தாலும், பிற விமானங்கள் இறங்கி எழுந்து கொண்டிருந்தன என்றார். ஆனால், இந்த விமானத்திற்கு டீ-ஐசிங் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் ரெக்கார்டிங்கில், விமானத்திற்கு ரன்வே 33-இல் இருந்து டேக் ஆஃப் செய்ய அனுமதி வழங்கப்பட்ட சுமார் 45 வினாடிகளுக்குப் பிறகு, "விமானம் தலைகீழாக உள்ளது" (Aircraft upside down) என்ற அவசர அறிவிப்பு வந்தது. விபத்து இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் விமானம் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்து எரிவதும், புகை மண்டலமாக இருப்பதும் தெரிகிறது. அவசரக் குழுக்கள் சில நிமிடங்களிலேயே வந்தடைந்தன.
இந்த விமானம் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனத்திற்கு (Houston-based law firm) சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பனி காரணமாக இறக்கைகளில் ஐஸ் (wing icing) ஏற்பட்டிருக்கலாம் என சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் சேஃப்டி போர்டு (NTSB) இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.
விபத்துக்குப் பிறகு பாங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த சம்பவம் மெய்ன் மாகாண வரலாற்றில் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவின் 50% வரி விதிப்பு: இந்திய ஆடைத் துறைக்கு அபாயம்.. AEPC வார்னிங்..!!