யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவை இன்றும் (மார்ச் 02) ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் (மேற்காசியா) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், பல நாடுகளின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் டுபாய், தோஹா, அபுதாபி போன்ற முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டு, உலக அளவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்தாகியுள்ளன.
இந்த சூழலில் ஏர் இந்தியா இன்று (மார்ச் 2, 2026) வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சவுதி அரேபியா, இஸ்ரேல், கத்தார் ஆகிய நாடுகளுக்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது. இரவு 11:59 மணி வரை (IST) இந்த ரத்து அமலில் இருக்கும் என்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது முந்தைய நாள் ரத்துகளைத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐரோப்பா செல்லும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமிர்தசரஸ்-பர்மிங்காம் (AI117), டில்லி-சூரிச் (AI151), டில்லி-கோபன்ஹேகன் (AI157), பர்மிங்காம்-டில்லி (AI114) உள்ளிட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளன. இவை மற்றும் அவற்றின் ரிட்டர்ன் ஃப்ளைட்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: போர் பதற்றம் அதிகம் உள்ள நாடுகளில் சிக்கிய இந்தியர்கள்!! வெளியுறவுத்துறை கொடுத்த லிஸ்ட்! அடுத்தக்கட்ட நடவடிக்கை!
வட அமெரிக்கா (அமெரிக்கா, கனடா) மற்றும் மற்ற ஐரோப்பிய விமானங்கள் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்தி அட்டவணைப்படி இயக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறியுள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கலாம்.
ஏர் இந்தியா நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு, ரீ-புக் அல்லது ரீஃபண்ட் வசதிகள் செய்ய உறுதியளித்துள்ளது. இதேபோல் இண்டிகோ, அகாசா ஏர் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் மேற்காசியா சேவைகளை ரத்து செய்துள்ளன.
மேற்காசியாவில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர் – குறிப்பாக யுஏஇயில் 35.5 லட்சம். இவர்களின் பயணம், திரும்பி வருதல் பெரும் சவாலாக உள்ளது. வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் அமைதி வலியுறுத்தி வருகின்றனர்.
போர் தொடர்ந்தால் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. பயணிகள் விமான நிலையங்களில் தவிப்பு, போன் லைன்கள் நிரம்பியுள்ளன. விரைவில் அமைதி திரும்பி விமான சேவை சீராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இந்தியாவுக்கு பாதிப்பு?! டெல்லியில் மோடி தலைமையில் அவசர ஆலோசனை!