அஜித் பவார் மரணத்தில் புது திருப்பம்!! விமானியின் தவறே விபத்துக்கு காரணம்!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
மோசமான வானிலையால் விமானி செய்த தவறான கணிப்பு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
புனே: மகாராஷ்டிர மாநிலம் பாராமதி அருகே நேற்று முன்தினம் நடந்த சிறு விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் தொடர்கிறது. விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி (AAIB) நடத்திய முதற்கட்ட விசாரணையில், மோசமான வானிலை மற்றும் விமானி செய்த தவறான கணிப்பு விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
லியர்ஜெட் 45 ரக சிறு விமானம் பாராமதி அருகே தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த அஜித் பவார் (67), அவரது உதவியாளர்கள் மற்றும் பைலட் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
விபத்து நடந்த மறுநாளே ஏஏஐபி சிறப்புக் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்தது. விசாரணையில், அன்று வானிலை மிகவும் மோசமாக இருந்தது. பார்வைத் திறன் (visibility) வெறும் 3 கிலோமீட்டராக இருந்தது. சாதாரண விதிகளின்படி (VFR) 5 கி.மீ. பார்வைத் திறன் தேவை. ஆனால் சிறப்பு VFR அனுமதியுடன் 3 கி.மீ.யில் தரையிறங்க முயற்சி செய்யப்பட்டது. இந்த சூழலில் விமானி ஓடுபாதையை தவறாக கணித்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!
மேலும், விமானி ஓடுபாதையை பார்த்த பிறகு திடீரென பாதையை மாற்ற முயன்றபோது கடுமையான திருத்தங்கள் செய்திருக்கலாம். இது விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்க வழிவகுத்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராமதி விமான நிலையம் Class G வகையைச் சேர்ந்தது. இங்கு முழுநேர கட்டுப்பாட்டு அமைப்போ, வழிகாட்டு கருவிகளோ இல்லை. இதனால் பைலட்டின் தனிப்பட்ட தீர்ப்பே முக்கியமானது.
விமானத்தின் கருப்பு பெட்டி (Flight Data Recorder & Cockpit Voice Recorder) மீட்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்த பிறகு துல்லியமான காரணம் தெரிய வரும். தொழில்நுட்ப கோளாறு ஏதும் இருந்ததா என்பதையும் விசாரணை குழு ஆராய்ந்து வருகிறது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து வந்த ஏஏஐபி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து சிறு விமான பயணங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜித் பவார் போன்ற முக்கிய தலைவரின் மறைவு மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாராமதி விமான விபத்து! அஜித் பவார் மரணத்தில் நடந்தது என்ன? சாட்டையை சுழற்றும் மத்திய அரசு!